About Us
Child Sexual Abuse
Services & Programs
Resources
FAQ
Downloads
Links
Contact Us
  குழந்தை பாலியல் கொடும | கொடுமை இழைப்போர | குழந்தைகளை ஆயத்தப்படுத்தல | அறிகுறிகள்  மற்றும் மாற்றங்கள  

நீ ஒரு திருடன் - மோசடிப் பேர்வழி என்று வைத்துக் கொள்வோம், கொழுத்த வங்கிக் கணக்குடன், திரண்ட சொத்துக்கும் அதிபதியான ஒரு வயதான விதவையை அண்மையில் தான் சந்தித்திருக்கிறாய் அதற்கு நேர் மாறாக உன்னுடைய பொருளாதாரம் திவாலாகும் நிலையில் இருக்கிறது. அந்த அம்மாவிடம் தேவைக்கு மேலாகவே சொத்து இருப்பதால் அதில் ஒரு பங்கை நீ எடுத்துக்கொள்வதில் தவறில்லை என்று கருதுகிறாய்.

இப்போது நீ என்ன செய்வாய்? அந்த அம்மாவிடம் நட்புக்கொள்வாய். அவருக்குச் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து தருவாய். அன்பளிப்புகள் வாங்கித் தருவாய். அவர் சொல்லுவதையெல்லாம் பொறுமையாகக் கேட்பாய். அவர் தனிமையாக உணரும்போது ஆறுதல் கூறுவாய். அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு அவருடைய துன்பம் உனக்குப் புரிகிறது என்று கூறுவாய். நாள் தவறாமல் அவரைச் சந்தித்துச் சிறிது  பொழுது அவருடன் கழிப்பாய். அவர் மற்றவர்களைப்போல் அல்ல என்று சொல்வாய். அவருடைய சந்தேகம் மெல்ல மெல்ல மறைந்து உன் மீது நம்பிக்கை பிறக்கச் செய்வாய்.

அதற்குப் பிறகுதான் பணத்தைப்பற்றிப்  பேச ஆரம்பிப்பாய். முதலீடு செய்வதற்குச் சிறப்பான வாய்ப்பு ஒன்று உள்ளது என்று சொல்லுவாய். அவருக்கு மட்டும் அதில் பங்குகொள்ள வாய்ப்பு தருவதாகச் சொல்லுவாய். அவர் ஆர்வம் காட்டினால் அந்த ஆர்வத்தைத் தூண்டுவாய். அவரது கேள்விக்கெல்லாம் பொறுமையாகப் பதில் சொல்லுவாய். அவருடைய பயங்கள் அவசியமற்றவை என்று உணர வைப்பாய்.

நீ நினைப்பது நடந்து விடுகிறது. அவர் உன்னை நம்புகிறார். காசோலையில் கையெழுத்துப் போட்டுத் தருகிறார்.

பாங்க் திறந்து மூன்று நிமிடம் ஆவதற்குள் பணத்துடன் கம்பிநீட்டி விடுகிறாய்- அடுத்த இலக்கை நோக்கி.

நீ திருடனாக இல்லாமல் பாலியல் குற்றவாளியாக இருந்தால்? விதவையின் பணத்தின் மீது ஆசை வைககாமல் அவருடைய ஆறு வயதுப் பேரப்பிள்ளையின் மீது ஆசை வைப்பவனாக இருந்தால்? உன் திட்டம் என்னவாக இருக்கும்?

அதிக வித்தியாசமானதாக இருக்காது. பாலியல் கொடுமை இழைப்பவர்கள் முதலில் குழந்தையைத் தேர்ந்தெடுத்து அதை அணுகுவார்கள். பேச்சுக் கொடுப்பார்கள். அதன் நம்பிக்கையைப் பெற்று குழந்தையின் பயத்தையும் சந்தேகத்தையும் போக்குவார்கள். பிறகு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பார்கள். தேவையானால் குழந்தையின் பெற்றோர் அல்லது அதை கவனித்துக் கொள்ளும் பெரியவர்களையும் சினேகப்படுத்திக் கொள்வார்கள்.

இச்செயல்பாடு ஆயத்தப்படுத்துதல் என்று அழைக்கப்படுகிறது இதன்மூலம் ஒரு கொடுமை இழைப்பவரால் குழந்தையிடம் எளிதாக அணுகமுடிகிறது. நட்புக்கொள்வதுபோல நடித்து பாலியல் கொடுமையில் ஈடுபட  வைக்க முடிகிறது. கொடுமையானது வெளியே வருவதற்கான வாய்ப்புகள் குறைந்து விடுகின்றன.

“ஒரு குழந்தையிடம் அன்பு காட்டி நம்பிக்கையைப் பெறுவதும் பின்னர் கடைசியில் நம்பிக்கைத் துரோகம் செய்து விடுகிவதுமே ஒரு குழந்தை பாலியல் கொடுமையாளரின் பிரதானச் செயலாக உள்ளது எல்லாக் குற்றவாளிகளும் இதேபோல் தான் நடந்து கொள்கிறார்கள். ஏனென்றால் குழந்தைகளின் உள்ளத்தை முதலில் கெடுத்தால் தான் அவர்களைத் தங்கள் விருப்பம்போல் செயல்படுத்த முடியும் என்று உண்மையை கண்டு கொள்வது மிக எளிது.

                                      - அன்னா சி. சால்டர் (Anna C. Salter)

பாலியல் குற்றவாளிகள் சொல்வது :

“.பெற்றோர்கள் ஒன்றுமறியா அப்பாவிகள். மாமன் மச்சான்களைக் கண்டுதான் அவர்கள் கவலைப்பட வேண்டும். ஆனால் அவர்களோ முன்பின் தெரியாதவர்களைப் பற்றியே கவலைப்படுகிறார்கள். நாங்கள் எப்படியெல்லாம் தந்திரமாகச் செயல்படமுடியும் என்று அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. பெற்றோர்கள் உடனிருக்கும்போதே, அதே அறையில், நான் குழந்தைகளைக் கொடுமைக்கு உள்ளாக்குவேன். ஆனால் அவர்களால் அதைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை அல்லது நடப்பது இன்னதென்று  அறிந்திருக்கவில்லை.

“நான் ஒரு உடல் ஊனமுற்றவன். மாதக்கணக்காகப் பாடுபட்டுப் பெற்றோர்களை ஆயத்தப்படுத்துவேன். பிறகு அவர்கள் என்னை வெளியே அழைத்துப்போய் உதவி செய்யும்படி தமது குழந்தைகளிடம் சொல்லுவார்கள். ஊனமுற்றவர்களால் பாலியல் கொடுமை இழைக்கமுடியும் என்று ஒருவரும் எண்ணவில்லை.

“பாலியலைப்பற்றிக் குழந்தைகளுக்குச் சொல்லித் தராத பெற்றோர்களும்  ஓரளவிற்கு இதற்குக் காரணமாகிறார்கள். குழந்தைகளுக்குச் சொல்லித் தரும் பணியை நான் எடுத்துக்கொண்டு அவர்களை ஏமாற்றினேன்.

பாலியல் சம்பந்தப்பட்ட தகவல்களைக் குழந்தைகளுடன் பகிர்ந்துகொள்ளப் பெற்றோர் சங்கடப்படக்கூடாது. பாலுறவு பற்றிய செய்திகளை முதலிலேயே தெரிந்து வைத்துள்ள  குழந்தையைக்  கொடுமைப்படுத்தவோ ஏமாற்றவோ முடியாது.

ஆயத்தப்படுத்துவது ஒரு தொடர்ச்சியான செயல்... 

ஆயத்தப்படுத்தல் திட்டமிட்டுப் படிப்படியாகச் செய்யப்படும் ஒரு செயல். யாரைக் கொடுமைக்கு ஆளாக்குவது என்று தீர்மானித்தவுடனேயே அந்த வேலை தொடங்கிவிடுகிறது. குழந்தைகளை எளிதாக நெருங்கக்கூடிய பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், குழந்தை இல்லங்கள், குடும்ப விழாக்கள் போன்ற இடங்களில் அவர்கள் தமது  கைவரிசையைத் தொடங்கிவிடுகிறார்கள். சில பேர் பெற்றோர்களுடனும் காப்பாளர்களுடனும் முதலில் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

இந்த மாதிரிக் குழந்தையைத்தான் கொடுமைக்கு ஆளாக்கமுடியும் என்ற வரையறை இல்லை. எந்தக் குழந்தைக்கும் கொடுமை இழைக்கமுடியும். ஆயினும், எளிதில் நெருங்கிவிடலாம் என்ற இயல்புகள் சில குழந்தைகளிடம் வெளிப்படையாகத் தெரியும். தான் நேசிக்கப்படுவதில்லை என்றும் , பிறரால் மதிக்கப்படுவதில்லை என்றும் உணரும் ஒரு குழந்தை ,பிற பெரியவர்கள் காட்டும் பரிவில் உருகிப்போய்விடும். பிரச்சனைகள் உள்ள குடும்பத்தில் வளரும் குழந்தைகளும் பெரியவர்ளின்  மேற்பார்வையின்றித் தனிமையில் வளரும் குழந்தைகளும், தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் இல்லாத குழந்தைகளும் நண்பர்களில்லாமல் தனியே இருக்கும் குழந்தைகளும் எளிதில் ஏமாந்துவிட வாய்ப்பு இருக்கிறது.

பாலியல் குற்றவாளிகள் குழந்தைகளை நெருங்குவதற்குப் பலவிதமான உபாயங்களைக்  கடைப்பிடிக்கிறார்கள். சில பேர் குழந்தையின் கவனத்தை எப்படியோ ஈர்த்து அதனுடன் ஒரு பாசப் பிணைப்பை  ஏற்படுத்திக்கொள்கிறார்கள். குழந்தைளோடு விளையாடுவதற்கும் வாகனங்களில் ஏற்றிக்கொண்டு செல்வதற்கும் விருந்துகள் மற்றும் பரிசுகளைத் தருவற்கும் முன் வருவார்கள்  வளர்ந்த குழந்தைகளுக்கு மது பானமும் போதை மருந்துகளும் தருவதாகக் கூட அவர்கள் சொல்லக்கூடும் எப்போதுமே அவர்கள் சொல்லுவதைப் பரிவோடு கேட்பார்கள். “உன் பெற்றோர் உன்னைப் புரிந்து கொள்வதுமில்லை, மதிப்பதுமில்யா?  “மற்றக் குழந்தைகள் உன்னைக் கேலி செய்கிறார்களா? உனக்கு இது எப்படியிருக்குமென்று எனக்குப் புரிகிறது. நான் உன் வயதாக இருக்கும்போது எனக்கும் அப்படித்தான் இருந்தது. “உன் வீட்டில் உன்னை நம்புவதில்லையா? உனக்கு அது எப்படியிருக்குமென்று எனக்குப் புரிகிறது. உன் பெற்றோர் நீ வளருவதை விரும்புவதேயில்லை. ஆனால் நான் உன்மேல் நம்பிக்கை வைக்கிறேன். நான் உன்னை மதிக்கிறேன். மற்ற எல்லோரையும்விட நான் உன் மீது மிகவும் அதிகமாக அக்கறை கொண்டு இருக்கிறேன். நான் உன்னை நேசிக்கிறேன். உனக்கு ஆதரவாக  நான் இருக்கிறேன், என்றெல்லாம் பசப்புவார்கள்.

வெற்றிகரமான பாலியல் குற்றவாளிகள் குழந்தைகளின் வாழ்க்கையில் எங்கெங்கே வெற்றிடம் இருக்கிறது என்று கண்டுபிடித்து அதை நிரப்ப முயற்சி செய்வார்கள்.

குழந்தைகளோடு ஒரு உணர்வுபூர்வமான நெருக்கத்தையும் பிணைப்பையும் ஏற்படுத்திக்கொள்வதால் அவர்களது உடம்பைத் தொடுவது அடுத்ததாக நிகழ்கிறது ஆயத்தப் படுத்தும் செயல்முறையை பயன்படுத்தி படிப்படியாகக் குழந்தையின் பாதுகாப்பு அரண்களைத் தகர்த்த பிறகு மெல்ல மெல்ல தன்னைத்  தொடுவதை  குழந்தை ஏற்றுக்கொள்ளுமாறு செய்து விடுகிறார்கள். முதன்முதலில் குழந்தைக்கும் குற்றமிழைப்பவருக்கும் உள்ள தொடுதலானது பாலியல் உணர்ச்சிக்கு அப்பாற்பட்டதும் அங்கீகரிக்கப்பட்ட வரம்புக்கு உட்பட்டதுமான ஒரு  தொடுதலாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார்கள் - எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு விபத்துபோன்ற தொடுதல், தோள்மீது கைபோடுவது, கைகளை உரசுவது போன்றவையாக இவை உள்ளன. இதுபோன்ற பாலியல் சம்பந்தமற்ற தொடுதல்கள் குழந்தையின் உணர்ச்சியை மழுங்கடித்து விடுகிறது. குற்றமிழைப்பவருக்கும் குழந்தைக்கும் இடையில் உள்ள சங்கடங்களைக் களைந்து எறிந்து குற்றமிழைப்பவரின் இறுதி இலட்சியமான வெளிப்படையான பாலியல் தொடுதல்களுக்கு வழிவகுக்கிறது.

ஆயத்தப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது ஏதோ ஒரு கட்டத்தில் அதை ரகசியமாக வைத்துக்கொள்வதைப்பற்றி பாலியல் குற்றவாளிகள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆரம்பத்தில், இதன்மூலம் குழந்தையைத் தங்களோடு நெருக்கமாகப் பிணைத்துக் கொள்கிறார்கள். “இந்தா இனிப்பு சாப்பிடு ஆனால் உன் நண்பர்களிடம் இதைப் பற்றிக் கூறாதே ஏன் என்றால், அவர்கள் உன் மீது பொறாமைப்படுவார்கள். மேலும் இது ற்றி உன் அம்மாவிடம் சொல்லாதே, சாப்பாட்டுக்கு நடுவில் இவ்வாறு சாப்பிட்டால் அது அம்மாவுக்குப் பிடிக்காது, என்று முதலில் சொல்வார்கள். பின்னர் நாளாகநாளாக, இரகசியமாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துவதோடு மிரட்டவும் செய்யத்துவங்குகிறார்கள்: நடந்ததை அம்மாவிடம் சொன்னால் அம்மா உன்னை வெறுத்து ஒதுக்குவாள். வருத்தப்படுவாள். அல்லது நான் அவளைக் கொன்றுவிடுவேன். அல்லது உன்னைக் கொன்றுவிடுவேன்”, என்று மிரட்டல்கள் வறுப்பெறும்.

இத்தகைய, குழந்தைகளை ஆயத்தப்படுத்தும் நடவடிக்கையை உணர்ந்து கொள்ள சிறந்த வழி உங்கள் குழந்தை மீதும் குழந்தையின் வாழ்க்கையோடு தொடர்புடையவர்கள் மீதும் உங்கள் கவனத்தைச் செலுத்துவதுதான். வயதில் பெரியவர்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள குழந்தைகளுக்குப் பெரியவர்களின் உதவி தேவை. தீயவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளத் தேவையான தகவல்கள் மற்றும் அனுபவங்களின் மூலம் பெறும் உள்ளுணர்வு போன்றவை அவர்களிடம் வளர்ச்சி பெறாத நிலையில் உள்ளது. அன்றாட அலுவல்களில் நாம் சிக்கித் தவித்தாலும் நம் குழந்தைகளின் நலத்தைத் தவிர வேறு ஏதும், வேறு எந்த அலுவலும் அதிக முக்கியமானது  அல்ல. அந்தப் பொறுப்பைக் கண்மூடித்தனமாக வேறு ஒருவரிடம் கேள்வியின்றி ஒப்படைக்கும்போது நாம் வம்பை விலைகொடுத்துவாங்குகிறோம்.

குழந்தைகளின் வாழ்க்கையில் உள்ள எல்லா முக்கியமான நபர்களைப் பற்றியும் - ஆசிரியர்கள், பயிற்சியாளர், உறவினர்கள், வேலையாட்கள், நண்பர்கள் என எல்லோரைப் பற்றியும், பெற்றோர் தெரிந்துகொள்ளவேண்டும். கேள்விகளை கேளுங்கள் ஈடுபாடு  கொள்ளுங்கள்.

  தயவுசெய்து குழந்தைகளுடன் பேசுங்கள். ஆயத்தப்படுத்தும் செய்கைகளை அவர்கள் உணர்ந்துகொள்ளக் கற்றுத் தாருங்கள். உடம்பைத் தொடும் எந்தச் சைகையையும் வயதில் மூத்த எவர் செய்தாலும் விழிப்புணர்வோடு இருக்கக் கற்றுத் தாருங்கள். குழந்தைகள் தங்கள் பிரச்சினைகள் மற்றும்  வேதனைகளை நம்பிக்கையோடு உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளக் கற்றுக் கொடுங்கள் அவசியத்தை உணர்த்துங்கள். தன்னுடைய பிரச்சினைகளையும் கவலைகளையும் தனது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடம் தயங்காமல் தெரிவிக்கலாம் என்பதை அறிந்துள்ள குழந்தை தான் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது.

 
இரண்டு வெவ்வேறு எதிர்மாறான எண்ணங்களுக்கு இடையில் இருதலைக் கொள்ளி எறும்பைப் போலத் தவிப்பது பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளின் முக்கிய இயல்பு ஆகும். குற்றமிழைப்பவரோடு தனக்குள்ள உறவுமுறையை மனதில்கொண்டு அவருடைய செயல்களுக்கும் நடவடிக்கைக்கும் ஒரு சரியான காரணத்தைக் கற்பித்துக்கொண்டு அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை குழந்தை பெற்றுவிடுகிறது இதனால் உண்மை நிலைமைக்கும், சூழலுக்கும் ஏற்றவாறு தனது அடிப்படை மதிப்பீடுகளையும் புரிந்து கொள்தலையும் மாற்றிக்கொள்வதற்கு  ‘Accomodation Syndrome’ என்று பெயர். பாலியல் கொடுமைக்கு ஆளான குழந்தைகளையும், சிறுவயதில் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட இன்றைய பெரியவர்களையும்  மறைமுகமான வழியில் மாபெரும் உளவியல்-சமூகத் தாக்கங்களுக்கு உட்படுத்தும் அவமான மற்றும் குற்ற உணர்ச்சிகளுக்கு இந்த ‘Syndrome’ தான் அடிப்படைக் காரணம் ஆகும்.
Top